Sunday, October 20, 2013



மழை

வீதியில்

பெய்த மழை
வீட்டிலும்
கொஞ்சம் பெய்யும்
ஓட்டை ஒடிசல்
பாத்திரமென்றாலும்
ஒழுகும் இடத்தில்
வைத்துக் கொண்டிருப்பாள் அம்மா
நான் கப்பலுக்காக
காகிதம் தேடுவேன்
ஜன்னலுக்கு வெளியாய்
தன் பிஞ்சுக் கை நீட்டி
மழையைப் பிடிப்பான் தம்பி
அடுக்களையில் அக்கா
அரிசியையோ பட்டாணியையோ
தேடிக் கொண்டிருப்பாள்
இரவு நேர மழைக்கு
இத்தனை ஆர்ப்பாட்டமென்றால்
பள்ளி நேர மழையில்
கண்ணா இரண்டு லட்டு
தின்னும் ஆசைதான்
இப்பொழுதெல்லாம்
வலுத்துச் சூழ்ந்த
செங்கல் சுவர்களில்
கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே
மழை நீர்
திட்டுக்களைப் பார்க்கும் போது
ஏதோ டீவியில்
பெய்வதைப் போல்
தெரிகிறது.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ 


பூட்டு

நன்றாய் திமிறி வளர்ந்த
தாத்தாவைப் போலவே
அத்தனை உறுதியாய்
கதவைக் காத்துக் கிடக்கும்
தாத்தாவின் பூட்டும்
அரை அடி சாவியைச் செருகி
முழுப் பலத்துடன் தாத்தா
மூன்று முறை திருக 
பட்டென்ற பயங்கர ஒலியில்
திறந்து கொள்ளும் பூட்டு
தாத்தா மரித்து சில காலம் வரை
தொங்கிக் கிடந்தது அந்தப் பூட்டு
அதை திறக்கும் ஒவ்வொரு முறையும்
தாத்தாவைக் கடிந்து கொள்வார் அப்பா
பிறகு வீடு மாறிப் போகவே
பூட்டும் மாறிப் போனது
உள்ளங்கையளவு சைனாப் பூட்டில்
சிறுத்த சாவியை இடுகையில்
ஓசையின்றித் திறந்து கொள்ளும்
அந்தப் பூட்டு
எவருமில்லாத ஓர் நாள் பொழுதில்
இப்படித்தான் ஓசையின்றி
சாமான்களை கள்ளன் கொண்டு சென்று விட
மிக நீண்ட தினங்களுக்குப் பிறகு
வாய் திறந்தாள் பாட்டி
அவரு காலத்திலயெல்லாம்
ஒரு குண்டுமணி களவு போயிருக்குமா.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ 


யானை

கணக்கு வாத்தி நம்பிரானை அடுத்து
நான் அதிகம் பயந்ததுஇந்த யானைக்குத்தான்
தெரு முக்கில் நுழையத் தொடங்கும்போதே
யானையென்று கூவத் தொடங்கிவிடுவான்
எதிர் வீட்டு பாபு
ராமு பாபு மூர்த்தி அனைவரும்
யானையை ஒட்டினாற் போலும்
நான் கொஞ்சம் எட்டியும்
நடக்கத் தொடங்கி விடுவோம்
யானையின் பெயர்
அதன் வயது
அது என்ன தின்னும்
அதன் வீடு எவ்ளோ பெருசு என
பாகனை தொணதொணத்தபடி தொடர்வோம்
பத்து பைசா வாங்கி
பாகனிடம் தரும் அழகை
ஒத்தை ரூபாய் தந்தினும்
காணலாமெனத் தோணும்
உள் வாங்கி வெளியடிக்கும்
அத்தும்பிக்கைத் தண்ணிரில்
உயிர் பூத்துக் குலுங்கும்
யானையின் சாணி மிதித்தால்
பள்ளியில் பாஸாகலாம் எனும்
பகட்டுப் புத்திக்காக
சண்டையிட்டெல்லாம் சாணி மிதித்ததுண்டு
நேற்று யானை பார்த்ததாய் மறுநாள்
பள்ளி வரை பெருமை பீற்றுவோம்
இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு ஒன்றென
யானைகள் பொம்மைகளானதில்
யானைக் கொண்டாட்ங்களுக்கு
மவுசுகள் அற்றுத்தான் விட்டன
எப்பொழுதாவது டிஸ்கவரியில் மகனை
அழைத்துக் காட்டிக்கொள்வேன்
இதுதான் யானையென.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ 

டெலிஃபோன்

 ஒரு நாள் ஒட்டடை அடிக்கையில்
 ஒரு ஓரமாய்க் கிடந்த
 பழைய டெலிஃபோன்
தன்னையும் சுத்தப்படுத்தக் கெஞ்சுவதாய் பட்டது
 துடைத்து விட்டு ஒரு எண்ணில் விரலிட்டுச் சுற்றியதும்
கிர்ரென்ற ஒலியில் பழைய நாட்களுள்
தன்னோடு சேர்த்து என்னையும்
அழைத்துச் சென்றது
வீட்டு முற்றத்தின் ஓரமாய்
 ஒரு பொமேரியன் நாய்க்குட்டி போல்
 அத்தனை அழகானதாய் கிடக்கும் அது
 தாத்தா இல்லாத சமயங்களில்
சும்மாவாவது சுற்ற விட்டு
அதன் சப்தம் கேட்பதில் ஓர் அலாதி ஆனந்தம்
 பாட்டி என்னை ஓவராகப் புகாரிட
அதற்கும் பூட்டு வாங்கி வந்துவிட்டார் தாத்தா
டெலிஃபோன் நம்பரை துண்டுச் சீட்டுகளில் எழுதி
 வகுப்பு முழுவதும் விநியோகித்து
 டீச்சரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட கதையுமுண்டு
ஓய்வின்றி அலறிய அந்த டெலிஃபோன்
ஒருநாள் ஓய்வெடுத்துக்கொள்ள
அந்த இடத்தில் புதிய சிறிய மினுக்கான
 பொத்தான் ரக ஃபோனை வந்து வைத்தார்கள்
 ஏதோ குமரி சிணுங்குவதைப் போல் கொண்ட
அதன் ஒலி அவ்வளவாய் எனக்கு
 இஷ்டப்படவில்லை.


 எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Saturday, December 17, 2011

வெற்றியின் சார்புகள்

வறண்ட சிந்தனையில் கவிய மறுத்து
ஒருக்கணித்துக் கிடந்தது என் பேனா.
இழந்த மின்சாரத்தில் ஒரு சாரமுமற்று
கதறாமல் கிடந்தது மின்விசிறி.
எட்டாவது முறையாய் எட்ட முயன்று
சாணேறி முழம் சறுக்கியது
சுவற்றோரச் சிலந்தி.
ரேஷன் கடையில் பொழுதிழந்ததை
புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.
ஏழுமுறை முயன்ற கஜினியின் வரலாறை
எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தான் தம்பி.
ஒதுங்க எவ்வாதரவுகளுமற்று இன்னமும்
வெளியைப் பொசுக்கிக் கொண்டிருந்தான் ஆதவன்.
சுற்றெங்கும் விரவிய நிராசைகள் மீதேறி
வென்று கொண்டது என் பேனா மட்டும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

ஒவ்வாத நிகழ்வுகள்.

புழுதியடைந்த அத் தெரு மணற்சிறுவர்கள்
உங்களது நிகழ்வுகளை எடுத்து ஓடிக்கொண்டிருப்பார்கள்
அறிந்த அல்லது அறியா ஓர் வாலிபனின் மிதிவண்டிச் சக்கரத்தில்
அந்த நிகழ்வுகள் உருண்டு கொண்டிருக்கும்
தோள் தாங்கிய கைப்பைக்குள்ளே சில்லரைக்குப் பதிலாய்
அந்நிகழ்வுகளைத் தேடிக்கொண்டிருப்பார் நடத்துனர்
உங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலான அப்பூந்தொட்டிக்குள்ளே
அதே நிகழ்வுகள் பூத்துக் கிடக்கும்
உங்கள் விருப்ப ஓர் தொலைக்காட்சி வழியாய்
உங்கள் நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டிருப்பாள் ஓர் பெண்
பெருங்காற்றிறைத்த மணற் துகள்களோடு
அந்நிகழ்வுகள் உங்கள் வாயிலில் இறைந்து கிடக்கும்
நடு நிசி இரவு வாழ் ஜந்துக்களெல்லாம்
அந்நிகழ்வுகளை உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும்
குழாயடிப் பெண்களும் தங்களுக்குள்ளே
உங்களது நிகழ்வுகளையே உரைத்துக் கொண்டிருப்பார்கள்.
மேல் வானம் பிளந்து கீழ் தரை வெடித்து வெளியேறும்
அம்புலி மாமா வேதாள நிகழ்வுகளைப் போன்றே
சுற்றிய நாற்புறமும் பூதாகரமாய் எழுந்து நிற்கும்
நேற்றைய உங்களின் ஒவ்வாத நிகழ்வுகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

Sunday, December 4, 2011

மாலைத் தேநீர்

கொடும் மழையினூடே கரைந்தோடும்

ஆற்றோர மணல் படுகைகளைப் போல்

ஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை

கழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய்

மாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன

பின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும்

சில எம காத உருவங்களையோ

பாத விரல்களினிடையேயான

சேற்றுப் புண் எரிச்சல்களையோ

ஓர் தேநீரின் இதமான கதகதப்பில்

சில மணித்துளிகளாவது அவைகளையற்று

இன்புற்றுக் கிடக்கக்கூடும் நீங்கள்

மென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ

எப்பலன்களுமற்ற உங்களையொத்தாருடையேயான

எவ்விஷயங்களுமற்ற வெற்று சம்பாஷனைகளோ

தேநீர்களன்றி சேயில்லா மலடி போல்

நிறைவுறக்கூடும் அவைகள்.

உங்களையும் மீறிய ஓர் கொடுஞ் சம்பவமொன்றில்

நாவிடறும் துர் வார்த்தைப் பிரயோக நிலையில்

உட்கொள்ளுங்கள் ஓர் தேநீரை.

சில நிமிடங்கள் வரையாவது நிறுத்தப்படக்கூடும்

சில துர் நிகழ்வுகள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Friday, December 2, 2011

ஒரு யுகத்திற்கு முந்தைய வார்த்தைகள்

உங்கள் பல்லிடுக்குகள் வழியாய்
இழுத்துப் பிடுங்கப்பட்ட சில வார்த்தைகளில்
உங்களையறியாமல் சில ஜீவன் துடிக்கும்.
சீரற்ற பல பாதைகளிலான இரத்த நாளங்களும்
அப்படியே அள்ளியேற்றுச் செரிக்கும் அவ்வார்த்தைகளை.
உங்களை ஒவ்வாத ஒரு தினத்தை இகழ்ந்து கொண்டும்,
உங்களைப் பகைத்தான்களின் ஒவ்வாத ஒரு தினத்தை
புகழ்ந்து கொண்டும் அவ்வார்த்தைகள்
மெல்ல தன் ஆற்றாமைகளைக் கசிய விட்டபடி
தன் காய் கனிய காலம் காத்துக் கிடக்கும்
கடந்தேறி விட்டவைகளை முற்றுமாய் புறந்தள்ளி விட்டதாயும்
வடுக்கள் உறைந்த பழைய மேனி களைந்து
ஓர் பொலிவு மேனியுடலில் உலாவிக் கொண்டிருப்பதாயும்
மெல்லச் சிலாகித்துக் கொண்டிருப்பீர்கள் எல்லாரிடமும்.
ஒரு பாதி வெளுத்த சூரியனின் ஓர் ஆரம்பப் பகலிலேயோ
அல்லது முற்றுமாய் தன்னைக் கரைத்த
அச்சூரியனின் இறுதி விடைத் தருணங்களிலேயோ
ஏழு மலை மற்றும் ஏழு கடல் தாண்டிச் சேர்த்ததாயும்
அல்லது எம்மனிதப் பதர்களும் அண்டியிராத
ஓர் கோட்டைக் கொத்தளமொன்றில் ஒழித்து வைத்ததாயும்
நீங்கள் நம்பிக் கொண்டிருந்த அவ்வார்த்தைச் சொற்றொடர்கள்
கணப் பொழுதில் உங்களைச் சேரும் அவ்வேளையில்
உங்கள் பொலிவு மேனியுடல் களைந்து
பின்னரும் ஒரு ராட்சஸனாய் உருவேற்றுக் கிடப்பீர்கள்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Tuesday, November 29, 2011

தலைப்புச் செய்திகள்.

அப்படித்தான் அவர்கள் சொல்லியிருப்பார்கள்

மூத்திரப்பை வழியாய் உயிர் கீழிறங்கி விடுவதுமாயும்

எவ்வுறுப்புக்களுமற்ற வெறும் பிண்டமாய்

மல்லாக்கக் கிடந்து சுவாசித்துக் கிடப்பதுமாய்

பிரகாசித்து ஒளிரும் சூரியப் பகலை

அவ்விஷயங்கள் மட்டுமே குருட்டித்து விடுவதுமாயும்

அவைகளையேற்று உலாவிக் கொண்டிருப்பார்கள்

அறுசுவை உணவுகளற்று அவர்களின் சிறு பெருங் குடல்கள்

அவ்விஷயங்களைக் கொண்டே செரித்துக்கொண்டிருக்கும்

அவர்களையெதிர்ப்பட்ட ஆண் பெண் தலைகளெல்லாம்

அவ்விஷயங்களணிந்து கிடக்கும் தலையேற்றக் கிரீடங்களாய்

உலகளாவிய எவ்விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டாலும்

அவவ்விஷயங்களைக் கொண்டே நிறைவு செய்வார்கள்

அவர்களுக்குண்டான ஆர்வ மிகுதிகளை விடவும்

அடுத்த வீட்டொருவனின் துர் மரணத்தை விடவும்

அவ்விஷயங்கள் அதி முக்கியத்துவப்படும் அவர்களுக்கு

அவ்விஷயங்களைக்கொண்டே உடுத்திக் கிழிப்பதுமாய்

அவ்விஷயங்களைக்கொண்டே சுவாசித்துக் கிடப்பதுமாய்

அவ்விஷயங்களைக்கொண்டே அவர்களை அவர்கள்

நிர்மாணித்துக் கிடப்பதுமாய் உருவகப்படுத்திக் கிடப்பர்கள் அவர்கள்

எல்லாம் ஓய்ந்தொழிந்து போன பிந்தைய தினமொன்றில்

நான்கு நாட்களுக்குப் பிந்தைய மூன்றாப் பக்கப் பெட்டிச் செய்தியாய்

வாசலருகே கேட்பாரற்றுக் கிடக்கும் அவ்விஷயங்கள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.

Wednesday, July 28, 2010

விடுபட்டுப்போன மழை

அறுந்து விழும் நூட்களாய்
அப்பொழுதே ஆர்ப்பரிப்பைத் துவக்கியிருக்கும்
மழைக்கு முந்தைய தூறல்கள்
ஆனால் மனதின் மையப் பகுதியில்
பின்னிப் பிடலெடுத்துக் கொண்டிருக்கும்
ஒரு பெரு மகிழ்ச்சி மழை
விரும்பி ஏற்று உள்ளுக்குறிஞ்சும்
மழைக் காலத்திய மண் வாசனைகள்
கருந்துணியிட்டு மறைத்தாற் போல்
மங்கிய மாலைப் பொழுது
இன்னும் மழை தொடராதாவென்ற
மனம் படர்ந்த ஏக்கத்தில்
ஜன்னலுக்கப்பால் நீண்ட கரங்கள்
குளம் கட்டிய மழை நீரில்
கால் தூக்கிய நடை
அவ்வப்போது உடல் வெடவடத்துச் செல்லும்
காற்றில் கலந்த மிச்சச் சாரல்கள்
மறு நாளைய வெயிலாக்கிரமிப்பு வரை
மனதை விட்டகலாது
மழை நேரத்திய மகிழ்ச்சி
ஓங்கி வலுத்துச் சூழ்ந்த சூளைச் சுவர்களில்
உரத்துக் களைத்த சின்னத்திரைகளில்
விடுபட்டுப் போன மழை நேரத்திய மகிழ்ச்சிக்காக
கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு
மறு நாள் ஜன்னல் திறக்கையில்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

அறிவிலி

இருளில் கரையும் ஈசலின் தவிப்பு
தூர ஒளிரும் சிம்னியில் ஆசுவாசம்
பறந்து விரையும் தேடலின் துவக்கம்
அருகில் அடைந்த ஆவல் மிகுதி
அத்துணையும் சேர்ந்த ஆனந்தக் கூத்தாடல்
எல்லாம் கிடைத்த ஏக்கச்செறிவு
ஒன்று மட்டும் எஞ்சியதாய் ஓரம் ஒரு சோகம்
அதையும் நாடிய அளவற்ற ஆவல்
பாய்வதற்கான மெல்லிய பதுங்கல்
மீறிய ஆவேசப் பாய்தல் இலட்சிய இலக்கில்
கரிந்து கரை சேரும் பரிவு மரணம்
அடுத்தவர்களுக்கான எச்சரிக்கையாய்
ஒரு ஓரம் அதன் பிணம்
எல்லாம் கண்டும் சீறிக் கிளம்பும்
இன்னொரு ஈசலாய் என் பயணத் துவக்கம்
உன் திசைகள் நோக்கி.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

கனவுத் தூதுவன்

கழிந்த எல்லா நாட்களைப் போலவே
குறுகி வளைந்து கரடுமுரடாய்ச் செல்கிறது
என் வழிப் பாதைகள்
மரங்கள் தூவும் மகரந்தப் பூக்களும்
மனம் இளக்கியோடும் மெல்லிய காற்றசைவுகளும்
அவ்வசைவுகள் கொண்டு சேர்க்கும்
பறவைச் சப்தங்களும்
வானச் சூரியனின் விசையழுத்தமற்ற இளஞ்சூட்டுக் கதிர்களும்
பயண வாழ்த்துக்களிடும் பாதை வழியர்களும்
என் பாதை பக்கமும் படுப்பதில்லை
படர்ந்து நீண்ட பிரயாசைப் பிரயாணங்களில்
தனித்துப் போகிறது என் பாதை மட்டும்
இரவு தாண்டிய என் கனவுகள்
என் வழி நோக்கிய பாதைகளிடுகின்றன
என் மனம் ஆட்கொண்ட கனவுத்தூதுவனொருவன்
எனக்குண்டான திசை தீட்டுகிறான்
கழிந்த கால கருமாந்திரங்களைச் சாடியும்
அதைப் போலல்லாதொரு புது விதி தேடியும்
சீரழிந்துச் சிதைப்பட்ட
கதையொன்றைச் சொல்லிச் சொல்லியே
பிரயாசையூட்டுகிறான் அப்பாதை வழி கிளர்ந்தெழ
உருவங்களும் உணர்வுகளுமற்ற அத்தூதுவனின்
வார்த்தைகளற்ற வழி கூறும் அவன் மொழிதல்களில்
எது எப்படி எதற்கென்றறியா ஒரு கரு நோக்கி
சதா ஏற்றத்தில் ஏறிச் செல்கிறது
பின்னடைவுகளுற்ற என் பிரயாணங்கள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

தனிமைப் பிரயோகங்கள்

விக்கலிலும் திக்கலிலும் ஊனறுத்து
உயிருடைத்துச் செல்லும்
மீறிய தனிமைப் பிரயோகங்கள்
சீரிய பாய்ச்சலில் உட்குத்தி நுழைந்து
மறு வழியாய் நிதானித்து வெளியேறி
வேறு வழியாய் மீண்டும் பாய்ந்து
சீர் வரிசையில் தைத்தெடுக்கின்றன
விட்டு தொட்டு நிற்கும்
அவளைப் பற்றியானவைகள்;
சலனமற்றக் குட்டைகள் வழி
நேரிய பிம்பங்களிட்டுச் செல்லும்
சிறுவனின் தவளைக் கல்லாய்
மணிக்கொரு முறை விரைந்தோடுகிறாள்
சீரற்று எகிறும் லப்டப்களினூடே
பரந்து விரிந்த வனாந்திரம்
திடமாய் வீரியமிட்டு நிற்கும்
எல்லைகளற்ற காட்சிப் பொருள்கள்
இந்தச் சூழலின் மையமிருந்தும்
எட்ட மறுக்கும் பார்வைகளில்
முட்டி நெருக்கும் நாற்புற நெருக்கங்களில்
அமிழ்ந்திருப்பதைப் போன்றதொரு பிரமிப்பு
உன் இல்லாமைகளில்
இவ்வளவுகளுக்குமிடையில்
நேர்ந்து கழிந்த கடந்தவைகளுக்காக
மன்னித்து விட்டேனென்ற ஆங்கிலப் பதத்தை
குலைந்து நெளிந்து கூறி முடிக்கையில்
ஒழுகித் தீர்த்த கரிய மேகமாய்
சுத்தமாய் போகிறேன் ஒவ்வொரு முறையும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ