Saturday, December 17, 2011

வெற்றியின் சார்புகள்

வறண்ட சிந்தனையில் கவிய மறுத்து
ஒருக்கணித்துக் கிடந்தது என் பேனா.
இழந்த மின்சாரத்தில் ஒரு சாரமுமற்று
கதறாமல் கிடந்தது மின்விசிறி.
எட்டாவது முறையாய் எட்ட முயன்று
சாணேறி முழம் சறுக்கியது
சுவற்றோரச் சிலந்தி.
ரேஷன் கடையில் பொழுதிழந்ததை
புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.
ஏழுமுறை முயன்ற கஜினியின் வரலாறை
எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தான் தம்பி.
ஒதுங்க எவ்வாதரவுகளுமற்று இன்னமும்
வெளியைப் பொசுக்கிக் கொண்டிருந்தான் ஆதவன்.
சுற்றெங்கும் விரவிய நிராசைகள் மீதேறி
வென்று கொண்டது என் பேனா மட்டும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

ஒவ்வாத நிகழ்வுகள்.

புழுதியடைந்த அத் தெரு மணற்சிறுவர்கள்
உங்களது நிகழ்வுகளை எடுத்து ஓடிக்கொண்டிருப்பார்கள்
அறிந்த அல்லது அறியா ஓர் வாலிபனின் மிதிவண்டிச் சக்கரத்தில்
அந்த நிகழ்வுகள் உருண்டு கொண்டிருக்கும்
தோள் தாங்கிய கைப்பைக்குள்ளே சில்லரைக்குப் பதிலாய்
அந்நிகழ்வுகளைத் தேடிக்கொண்டிருப்பார் நடத்துனர்
உங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலான அப்பூந்தொட்டிக்குள்ளே
அதே நிகழ்வுகள் பூத்துக் கிடக்கும்
உங்கள் விருப்ப ஓர் தொலைக்காட்சி வழியாய்
உங்கள் நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டிருப்பாள் ஓர் பெண்
பெருங்காற்றிறைத்த மணற் துகள்களோடு
அந்நிகழ்வுகள் உங்கள் வாயிலில் இறைந்து கிடக்கும்
நடு நிசி இரவு வாழ் ஜந்துக்களெல்லாம்
அந்நிகழ்வுகளை உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும்
குழாயடிப் பெண்களும் தங்களுக்குள்ளே
உங்களது நிகழ்வுகளையே உரைத்துக் கொண்டிருப்பார்கள்.
மேல் வானம் பிளந்து கீழ் தரை வெடித்து வெளியேறும்
அம்புலி மாமா வேதாள நிகழ்வுகளைப் போன்றே
சுற்றிய நாற்புறமும் பூதாகரமாய் எழுந்து நிற்கும்
நேற்றைய உங்களின் ஒவ்வாத நிகழ்வுகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
sunaithnadwi@gmail.com

Sunday, December 4, 2011

மாலைத் தேநீர்

கொடும் மழையினூடே கரைந்தோடும்

ஆற்றோர மணல் படுகைகளைப் போல்

ஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை

கழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய்

மாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன

பின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும்

சில எம காத உருவங்களையோ

பாத விரல்களினிடையேயான

சேற்றுப் புண் எரிச்சல்களையோ

ஓர் தேநீரின் இதமான கதகதப்பில்

சில மணித்துளிகளாவது அவைகளையற்று

இன்புற்றுக் கிடக்கக்கூடும் நீங்கள்

மென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ

எப்பலன்களுமற்ற உங்களையொத்தாருடையேயான

எவ்விஷயங்களுமற்ற வெற்று சம்பாஷனைகளோ

தேநீர்களன்றி சேயில்லா மலடி போல்

நிறைவுறக்கூடும் அவைகள்.

உங்களையும் மீறிய ஓர் கொடுஞ் சம்பவமொன்றில்

நாவிடறும் துர் வார்த்தைப் பிரயோக நிலையில்

உட்கொள்ளுங்கள் ஓர் தேநீரை.

சில நிமிடங்கள் வரையாவது நிறுத்தப்படக்கூடும்

சில துர் நிகழ்வுகள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Friday, December 2, 2011

ஒரு யுகத்திற்கு முந்தைய வார்த்தைகள்

உங்கள் பல்லிடுக்குகள் வழியாய்
இழுத்துப் பிடுங்கப்பட்ட சில வார்த்தைகளில்
உங்களையறியாமல் சில ஜீவன் துடிக்கும்.
சீரற்ற பல பாதைகளிலான இரத்த நாளங்களும்
அப்படியே அள்ளியேற்றுச் செரிக்கும் அவ்வார்த்தைகளை.
உங்களை ஒவ்வாத ஒரு தினத்தை இகழ்ந்து கொண்டும்,
உங்களைப் பகைத்தான்களின் ஒவ்வாத ஒரு தினத்தை
புகழ்ந்து கொண்டும் அவ்வார்த்தைகள்
மெல்ல தன் ஆற்றாமைகளைக் கசிய விட்டபடி
தன் காய் கனிய காலம் காத்துக் கிடக்கும்
கடந்தேறி விட்டவைகளை முற்றுமாய் புறந்தள்ளி விட்டதாயும்
வடுக்கள் உறைந்த பழைய மேனி களைந்து
ஓர் பொலிவு மேனியுடலில் உலாவிக் கொண்டிருப்பதாயும்
மெல்லச் சிலாகித்துக் கொண்டிருப்பீர்கள் எல்லாரிடமும்.
ஒரு பாதி வெளுத்த சூரியனின் ஓர் ஆரம்பப் பகலிலேயோ
அல்லது முற்றுமாய் தன்னைக் கரைத்த
அச்சூரியனின் இறுதி விடைத் தருணங்களிலேயோ
ஏழு மலை மற்றும் ஏழு கடல் தாண்டிச் சேர்த்ததாயும்
அல்லது எம்மனிதப் பதர்களும் அண்டியிராத
ஓர் கோட்டைக் கொத்தளமொன்றில் ஒழித்து வைத்ததாயும்
நீங்கள் நம்பிக் கொண்டிருந்த அவ்வார்த்தைச் சொற்றொடர்கள்
கணப் பொழுதில் உங்களைச் சேரும் அவ்வேளையில்
உங்கள் பொலிவு மேனியுடல் களைந்து
பின்னரும் ஒரு ராட்சஸனாய் உருவேற்றுக் கிடப்பீர்கள்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Tuesday, November 29, 2011

தலைப்புச் செய்திகள்.

அப்படித்தான் அவர்கள் சொல்லியிருப்பார்கள்

மூத்திரப்பை வழியாய் உயிர் கீழிறங்கி விடுவதுமாயும்

எவ்வுறுப்புக்களுமற்ற வெறும் பிண்டமாய்

மல்லாக்கக் கிடந்து சுவாசித்துக் கிடப்பதுமாய்

பிரகாசித்து ஒளிரும் சூரியப் பகலை

அவ்விஷயங்கள் மட்டுமே குருட்டித்து விடுவதுமாயும்

அவைகளையேற்று உலாவிக் கொண்டிருப்பார்கள்

அறுசுவை உணவுகளற்று அவர்களின் சிறு பெருங் குடல்கள்

அவ்விஷயங்களைக் கொண்டே செரித்துக்கொண்டிருக்கும்

அவர்களையெதிர்ப்பட்ட ஆண் பெண் தலைகளெல்லாம்

அவ்விஷயங்களணிந்து கிடக்கும் தலையேற்றக் கிரீடங்களாய்

உலகளாவிய எவ்விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டாலும்

அவவ்விஷயங்களைக் கொண்டே நிறைவு செய்வார்கள்

அவர்களுக்குண்டான ஆர்வ மிகுதிகளை விடவும்

அடுத்த வீட்டொருவனின் துர் மரணத்தை விடவும்

அவ்விஷயங்கள் அதி முக்கியத்துவப்படும் அவர்களுக்கு

அவ்விஷயங்களைக்கொண்டே உடுத்திக் கிழிப்பதுமாய்

அவ்விஷயங்களைக்கொண்டே சுவாசித்துக் கிடப்பதுமாய்

அவ்விஷயங்களைக்கொண்டே அவர்களை அவர்கள்

நிர்மாணித்துக் கிடப்பதுமாய் உருவகப்படுத்திக் கிடப்பர்கள் அவர்கள்

எல்லாம் ஓய்ந்தொழிந்து போன பிந்தைய தினமொன்றில்

நான்கு நாட்களுக்குப் பிந்தைய மூன்றாப் பக்கப் பெட்டிச் செய்தியாய்

வாசலருகே கேட்பாரற்றுக் கிடக்கும் அவ்விஷயங்கள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.