Wednesday, July 28, 2010

விடுபட்டுப்போன மழை

அறுந்து விழும் நூட்களாய்
அப்பொழுதே ஆர்ப்பரிப்பைத் துவக்கியிருக்கும்
மழைக்கு முந்தைய தூறல்கள்
ஆனால் மனதின் மையப் பகுதியில்
பின்னிப் பிடலெடுத்துக் கொண்டிருக்கும்
ஒரு பெரு மகிழ்ச்சி மழை
விரும்பி ஏற்று உள்ளுக்குறிஞ்சும்
மழைக் காலத்திய மண் வாசனைகள்
கருந்துணியிட்டு மறைத்தாற் போல்
மங்கிய மாலைப் பொழுது
இன்னும் மழை தொடராதாவென்ற
மனம் படர்ந்த ஏக்கத்தில்
ஜன்னலுக்கப்பால் நீண்ட கரங்கள்
குளம் கட்டிய மழை நீரில்
கால் தூக்கிய நடை
அவ்வப்போது உடல் வெடவடத்துச் செல்லும்
காற்றில் கலந்த மிச்சச் சாரல்கள்
மறு நாளைய வெயிலாக்கிரமிப்பு வரை
மனதை விட்டகலாது
மழை நேரத்திய மகிழ்ச்சி
ஓங்கி வலுத்துச் சூழ்ந்த சூளைச் சுவர்களில்
உரத்துக் களைத்த சின்னத்திரைகளில்
விடுபட்டுப் போன மழை நேரத்திய மகிழ்ச்சிக்காக
கொஞ்சம் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு
மறு நாள் ஜன்னல் திறக்கையில்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

அறிவிலி

இருளில் கரையும் ஈசலின் தவிப்பு
தூர ஒளிரும் சிம்னியில் ஆசுவாசம்
பறந்து விரையும் தேடலின் துவக்கம்
அருகில் அடைந்த ஆவல் மிகுதி
அத்துணையும் சேர்ந்த ஆனந்தக் கூத்தாடல்
எல்லாம் கிடைத்த ஏக்கச்செறிவு
ஒன்று மட்டும் எஞ்சியதாய் ஓரம் ஒரு சோகம்
அதையும் நாடிய அளவற்ற ஆவல்
பாய்வதற்கான மெல்லிய பதுங்கல்
மீறிய ஆவேசப் பாய்தல் இலட்சிய இலக்கில்
கரிந்து கரை சேரும் பரிவு மரணம்
அடுத்தவர்களுக்கான எச்சரிக்கையாய்
ஒரு ஓரம் அதன் பிணம்
எல்லாம் கண்டும் சீறிக் கிளம்பும்
இன்னொரு ஈசலாய் என் பயணத் துவக்கம்
உன் திசைகள் நோக்கி.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

கனவுத் தூதுவன்

கழிந்த எல்லா நாட்களைப் போலவே
குறுகி வளைந்து கரடுமுரடாய்ச் செல்கிறது
என் வழிப் பாதைகள்
மரங்கள் தூவும் மகரந்தப் பூக்களும்
மனம் இளக்கியோடும் மெல்லிய காற்றசைவுகளும்
அவ்வசைவுகள் கொண்டு சேர்க்கும்
பறவைச் சப்தங்களும்
வானச் சூரியனின் விசையழுத்தமற்ற இளஞ்சூட்டுக் கதிர்களும்
பயண வாழ்த்துக்களிடும் பாதை வழியர்களும்
என் பாதை பக்கமும் படுப்பதில்லை
படர்ந்து நீண்ட பிரயாசைப் பிரயாணங்களில்
தனித்துப் போகிறது என் பாதை மட்டும்
இரவு தாண்டிய என் கனவுகள்
என் வழி நோக்கிய பாதைகளிடுகின்றன
என் மனம் ஆட்கொண்ட கனவுத்தூதுவனொருவன்
எனக்குண்டான திசை தீட்டுகிறான்
கழிந்த கால கருமாந்திரங்களைச் சாடியும்
அதைப் போலல்லாதொரு புது விதி தேடியும்
சீரழிந்துச் சிதைப்பட்ட
கதையொன்றைச் சொல்லிச் சொல்லியே
பிரயாசையூட்டுகிறான் அப்பாதை வழி கிளர்ந்தெழ
உருவங்களும் உணர்வுகளுமற்ற அத்தூதுவனின்
வார்த்தைகளற்ற வழி கூறும் அவன் மொழிதல்களில்
எது எப்படி எதற்கென்றறியா ஒரு கரு நோக்கி
சதா ஏற்றத்தில் ஏறிச் செல்கிறது
பின்னடைவுகளுற்ற என் பிரயாணங்கள்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

தனிமைப் பிரயோகங்கள்

விக்கலிலும் திக்கலிலும் ஊனறுத்து
உயிருடைத்துச் செல்லும்
மீறிய தனிமைப் பிரயோகங்கள்
சீரிய பாய்ச்சலில் உட்குத்தி நுழைந்து
மறு வழியாய் நிதானித்து வெளியேறி
வேறு வழியாய் மீண்டும் பாய்ந்து
சீர் வரிசையில் தைத்தெடுக்கின்றன
விட்டு தொட்டு நிற்கும்
அவளைப் பற்றியானவைகள்;
சலனமற்றக் குட்டைகள் வழி
நேரிய பிம்பங்களிட்டுச் செல்லும்
சிறுவனின் தவளைக் கல்லாய்
மணிக்கொரு முறை விரைந்தோடுகிறாள்
சீரற்று எகிறும் லப்டப்களினூடே
பரந்து விரிந்த வனாந்திரம்
திடமாய் வீரியமிட்டு நிற்கும்
எல்லைகளற்ற காட்சிப் பொருள்கள்
இந்தச் சூழலின் மையமிருந்தும்
எட்ட மறுக்கும் பார்வைகளில்
முட்டி நெருக்கும் நாற்புற நெருக்கங்களில்
அமிழ்ந்திருப்பதைப் போன்றதொரு பிரமிப்பு
உன் இல்லாமைகளில்
இவ்வளவுகளுக்குமிடையில்
நேர்ந்து கழிந்த கடந்தவைகளுக்காக
மன்னித்து விட்டேனென்ற ஆங்கிலப் பதத்தை
குலைந்து நெளிந்து கூறி முடிக்கையில்
ஒழுகித் தீர்த்த கரிய மேகமாய்
சுத்தமாய் போகிறேன் ஒவ்வொரு முறையும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ